Friday 5 December 2014

மெல்லத் தமிழன் இனி...! 39 - அக்கினிக் குஞ்சுகளின் கதையும், 'அம்மா'வுக்கு ஒரு கடிதமும்


ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

“தீர்வே இல்லையா?”- மதுவின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக ஏராளமானோர் எழுப்பும் கேள்வி இது. தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமே கிடையாது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குடிநோயாளியும் மதுவிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவருகிறது ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ அமைப்பு. அதேசமயம், அறிவியலுக்கு அப்பாற்பட்டும் ஆச்சரியங்கள் நிறைந்திருக் கின்றன. உணர்வுபூர்வமாக, குறிப்பாக குழந்தைகளால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கவலையின் குறியீடுகள் நாம் எனில், மகிழ்ச்சியின் குறியீடு குழந்தைகள். அழிப்பின் குறியீடு நாம் எனில், உயிர்ப்பின் குறியீடு குழந்தைகள். நாம் கோபத்தையும் வன்மத்தையும் பொத்திக் காக்கிறோம் எனில், குழந்தைகள் அன்பை மட்டுமே அடைகாக்கிறார்கள். அவர்களால் மட்டுமே எதிர்மறை எண்ணங்களை எளிதில் கடந்து ஏகாந்த நிலையை அடைய முடிகிறது. நம்மிடமிருந்து அவர்கள் கற்பதைவிட, அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியதே அதிகம், அவசியம். இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள், உணர்வீர்கள்!
அக்கினிக் குஞ்சுகளின் கதை!
தருமபுரிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல ஒடுங்கியிருக்கிறது அந்த மலைக் கிராமம். பேபினமருதஅள்ளி. திக்குக்கு ஒன்றாய்த் திட்டுகள் போன்று சிறு குன்றுகள். குன்றுக்கு ஒன்றாய்க் குடிசைகள். அதிகம் போனால் அறுபது தேறும். பக்கத்திலேயே படுத்திருக்கிறது நாகாவதி அணை. பெயருக்குத்தான் அணை. ஆத்திர அவசரத்துக்கு ஒரு சொட்டு நீர் கிடைக்காது அணையிலிருந்து. அது ஒரு துயர வரலாறு. அணை இப்போதிருக்கும் பள்ளத்தாக்கில் வசித்தவர்கள்தான் இந்த மக்கள். அணைக்காக அரசுக்கு நிலத்தைக் கொடுத்தவர்கள், காசை வாங்கிக்கொண்டு உயரமான பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அதனால், அணையே உடைந்தாலும் இவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காது!
தலைமுறையை அழித்த மது
கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பேபினமருதஅள்ளி என்றால், சாராயம் என்று அர்த்தம். அது அவர்களின் குலத்தொழில். காய்ச்சுவது, விற்பது, குடிப்பது மட்டுமே தெரியும். பக்கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் வந்து வாங்கிப்போவார்கள். ஒருகட்டத்தில் சாராயம் ஒழிக்கப்பட்டது. மக்கள் விவசாயத்துக்கு மாறினார்கள். அப்போது வணிகமயமான மது இவர்களை ஆட்கொண்டது. மது ஒருபக்கம் மக்களை ஆக்கிரமித்தது என்றால், இன்னொரு பக்கம் அணைக்காக வளமான ஊரையும் இழந்தார்கள். இப்படியாக மது ஒரு கிராமத்தையே, ஒரு தலைமுறையையே அழித்துவிட்டது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஊருக்குள் 45 வயதைத் தாண்டிய ஆண்கள் நான்கு பேர்கூட இல்லை. ஒரு தலைமுறை அழிந்த பிறகே, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதிய விடியல் பிறந்திருக்கிறது - குழந்தைகளின் வடிவில்!
மாற்றத்தின் ஊற்றுக்கண் கல்வித் துறை. அப்போது நல்லம்பள்ளி ஒன்றியத்தின் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக இருந்தவர் தங்கவேல். மதுப் பழக்கத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர். இந்த கிராமத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றவர், அரசிடம் பேசி முதலில் இங்கே ஒரு தொடக்கப் பள்ளியைக் கொண்டுவந்தார். அங்கிருந்து தொடங்கியது மாற்றம்.
துளிர்கள் செய்த புரட்சி
முதல் தலைமுறையாகப் பள்ளிக்கு வந்த குழந்தைகள், தாங்கள் கற்றதுடன், பெற்றோருக்கும் மதுவின் தீமைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். ஒரு தலைமுறை அழிந்த சோகத்தை - அழிவுக்கான அரக்கன் எது என்பதைத் தகப்பன்களுக்கு உணர்த்தினார்கள். “இன்றைக்கு நீங்கள் மது அருந்தினால் வீட்டுக்கு வர மாட்டோம்” என்று பள்ளியின் வாசலில் இரவுகளைக் கழித்தார்கள். பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தினமும் சிலேட்டில், துண்டுச் சீட்டில், வீட்டுப்பாட நோட்டில் அப்பன்களுக்கு வகுப்பெடுத்தார்கள். பல சமயங்கள் குடிநோயாளித் தகப்பன்களால் தாக்குதலுக்கும் ஆளானார்கள். ஆனாலும், அசரவில்லை பிள்ளைகள். குழந்தைகள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டம் அது. குழந்தைகளின் இந்தப் போராட்டம், ஊரின் பதின்ம வயது இளைஞர்களை முதலில் பாதித்தது. அவர்கள் மதுவைக் கைவிட்டார்கள். கூடவே, குடித்துவிட்டு ஊருக்குள் வரக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டார்கள். ஓரிரு மாதங்களிலேயே மாற்றங்கள் தொடங்கின. இன்று சுத்தமாக மதுவே இல்லாத கிராமம் அது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்திடம் பேசினேன். “இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மக்கள் மதுவின் பிடியில் இருந்தாலும், தாங்கள் படிக்கவில்லையே என்கிற ஏக்கம் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. பள்ளி தொடங்க அரசு அனுமதி அளித்துவிட்டபோதும் இந்த மலைக் கிராமத்தில் பள்ளியைக் கட்டிக்கொடுக்க ஒப்பந்ததாரர் யாரும் முன்வரவில்லை. லாபம் கிடைக்காது என்று ஒதுங்கிக்கொண்டார்கள். அப்போது கடப்பாரை, மண்வெட்டிகளுடன் தாங்களாக முன்வந்து இந்தப் பள்ளியைக் கட்டிக்கொடுத்தவர்கள் ஊரின் இளைஞர்கள். தங்களின் அடுத்த தலைமுறையாவது கல்வி கற்க வேண்டும் என்று அவர்களுக்குள் தீயாக எழுந்த ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொண்டோம். குழந்தைகள் மூலமாக அதே தீயைப் பயன்படுத்திக்கொண்டுதான் மது என்னும் அரக்கனையும் அழித்தோம்” என்கிறார்.
எழுதப் படிக்கத் தெரியாதுங்க!
ஊரின் இளைஞர்களிடம் பேசினேன். “எங்க அப்பன்களை யும் மொத்தமா தப்பு சொல்ல முடியாதுங்க. ஊருக்குள்ள தண்ணி இல்ல, கரட்டு மேட்டுல விவசாயமும் செய்ய முடியாது. விரக்தியில பெரியவங்களுக்கு முன்னேறணும்ங்கிற எண்ணமே இல்லாமப் போச்சு. கிடைக்குற வேலையைச் செஞ்சு எல்லாத்தையும் குடிச்சே அழிச்சாங்க. அவங்களும் செத்துப்போனாங்க. இதோ உங்க முன்னாடி இருக்கிற இந்த ஆறு பேருல அஞ்சு பேருக்குத் தகப்பன் கிடையாது. ஆசையா ஜீன்ஸ், டீ - ஷர்ட் போட்டுக்கிறோமே தவிர, எங்களுக்கு ஒருத்தனுக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாதுங்க. சினிமா போஸ்டர்ல விஜய்யோட முகத்தைப் பார்த்துதான் அது ‘கத்தி’ படம்னு தெரிஞ்சு போய்ப் பார்த்தோம்” என்று கண் கலங்குகிறார் காசி என்கிற இளைஞர்.
மதுவிலிருந்து விடுபட்டாலும் வருவாய்க்கு வழி தெரியாமல் தவிக்கிறார்கள் மக்கள். கணவன், மனைவி சகிதம் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கட்டட வேலை பார்க்கிறார்கள். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வந்து பிள்ளை முகம் பார்த்துச் செல்கிறார் கள். மாற்றத்தை நிகழ்த்திய குழந்தைகள் ஊருக்குள் வயதான பாட்டிகளிடம் வளர்கிறார்கள். பிள்ளைகளின் கண்கள் பெற்றோர் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கின்றன!
ஆனாலும், மதுவெனும் முள்வனத்தை அக்கினிக் குஞ்சு கள் எரித்தழித்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிகிறது.
'அம்மா'வுக்கு ஒரு கடிதம்
குன்னூர் அருகே இருக்கிறது அழகான மலைக் கிராமம் பெட்டட்டி. ஊரெங்கும் பனியும் பசுமையும் போர்த்திக் கிடக்கிறது. கூடவே, பட்டினியும், வறுமையும். காரணம் மது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை.
சம்பவம் 1: பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் குத் தடுமாறியபடி வருகிறார் தந்தை ஒருவர். வகுப்பறைக்குள் புகுந்தவர், எட்டாவது படிக்கும் தனது மகளை இழுத்துப் போட்டு அடிக்கிறார். போதையில் அங்கேயே சரிகிறார்.
சம்பவம் 2: மூன்றாவது படிக்கும் குழந்தை அவன். ஒருநாள் வகுப்பறைக்கு வரும்போதே தடுமாறியபடி வருகிறான். சிறிது நேரத்தில் வகுப்பிலேயே மயங்கிச் சரிகிறான். பதறிய ஆசிரியர்கள் அவனைச் சோதித்துப்பார்க்கிறார்கள். அவனிடமும் மதுவின் நெடி.
சம்பவம் 3: ஐந்தாவது படிக்கும் பெண் குழந்தை அவள். பெற்றோர் இருவருமே குடிநோயாளிகள். தினமும் வீட்டில் சண்டை. ஒருநாள் தந்தை தீக்குளித்துவிட்டார்.
சம்பவம் 4: 4, 5-வது படிக்கும் சகோதரர்கள் அவர்கள். குடிபோதையில் தாயை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் தந்தை. அநாதையாகத் தத்தளித்தவர்களைத் தத்தெடுத்துள்ளார், காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்.
அன்புள்ள அம்மா
இப்படியாகச் சம்பவங்கள் தொடர, ஒருகட்டத்தில் மது வுக்கு எதிராகப் பொங்கியெழுந்துவிட்டார்கள் குழந்தைகள். ஆதரவாகக் கரம் கொடுத்தார்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த மனோகரனும் ஆங்கில ஆசிரியையான புஷ்பாவும். வகுப்பில் கல்வியுடன் சேர்த்து மதுவின் தீமைகளைப் பற்றியும் கற்பித்தார்கள். குழந்தைகள் அதனை அப்படியே வீட்டில் ஒப்பித்தார்கள். கூடவே, கடிதம் எழுதும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். தங்களது பெற்றோர், அக்கம்பக்கத்தினர், டாஸ்மாக் கடையினர் என எல்லோருக்கும் கைப்படக் கடிதம் எழுதினார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் எழுதிய கடிதம் அத்தனை உருக்கமாக இருக்கிறது.
“அன்புள்ள அம்மா, வணக்கம். எங்களைப் போன்ற ஏழைக் குழந்தைகள் கல்வி கற்கத் தங்கள் அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. என்றாலும், அரசின் மதுபான விற்பனையால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்ததுபோல அனைத்தும் வீணாகிவிடுமோ என்று அஞ்சுகிறோம். நாங்கள் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் எங்கள் அப்பாக்களின் உடல் நலம் குன்றிவருவதால், தாலியை இழந்துவிடுவோமோ என்று எங்கள் அம்மாக்கள் அஞ்சுகின்றனர். எங்கள் சகோதரர்களும் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் கொடநாடு வரும்போது, அருகிலிருக்கும் எங்கள் பகுதிக்கும் வந்தால் உண்மை நிலையை அறிவீர்கள்” என்று நீள்கின்றன கண்ணீர் வரிகள்.
குழந்தைகள் மீது சத்தியம்
ஒருகட்டத்தில் அப்பாக்கள் செவிசாய்த்தார்கள். கூடவே, பள்ளியில் வாரந்தோறும் ‘ஆல்கஹால் அனானிமஸ்’ அமைப்பின் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்துக்குப் பெற்றோரை வற்புறுத்தி அழைத்துவந்தார்கள். தொடர்ந்து நடந்த அந்தக் கூட்டங்களும் மழலைகளின் அன்பும் குடிநோயாளிகளின் மனதை மாற்றின. சாரை சாரையாகப் பள்ளிக்கு வந்து ‘இனிமேல் நாங்கள் மது அருந்த மாட்டோம். எங்கள் குழந்தைகள் மீது சத்தியம்’ என்று எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்றார்கள். தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் யாரும் மது அருந்துவதில்லை. பெட்டட்டி கிராமமும் படிப்படியாக மதுவிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறது. மாற்றத்தை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் குழந்தைகள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன் ஓய்வு பெற்றுவிட்டாலும் தனது சேவையைத் தொடர்கிறார். பள்ளிகளிலும் கிராமங்களிலும் மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்கிறார். மனோகரன் மற்றும் புஷ்பாவிடம் பேசினோம். “இன்று நாடு இருக்கும் நிலையில், மற்ற இடங்களைவிடப் பள்ளி, கல்லூரிகளில்தான் மதுவின் தீமைகள்குறித்துப் பாடம் எடுக்க வேண்டும். கடந்த தலைமுறையின் பாதியை மது அழித்துவருகிறது. எனவே, வரும் தலைமுறையையாவது காப்பது அவசியம். அந்தப் பணி பள்ளி, கல்லூரிகளில் தொடங்க வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கைகளை, பாடத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன்னதாக அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்கான சிறு முயற்சியையாவது தங்கள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் குழந்தைகள் நடத்திய மாற்றத்தைக் கேள்விப்பட்ட குஜராத்தின் ‘ரிவர்சைட் ஸ்கூல்’ அமைப்பு இந்த ஆண்டு எங்கள் பள்ளியை நாட்டின் 100 சிறந்த பள்ளிகளுள் ஒன்றாகத் தேர்வுசெய்து கவுரவித்திருக்கிறது. குழந்தைகளை குஜராத்துக்கு அழைத்துச்சென்று பரிசுகள் வழங்கியது. கிரிக்கெட் வீரர் திராவிட் கையில் விருது வாங்கினோம்” என்கிறார்கள் பெருமையுடன்!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை / அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; / வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? / தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்…
- மகாகவி பாரதியார்
- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
மதுவுக்கு எதிரான ‘தி இந்து’வின் பயணம் தொடரும்…
‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடரைத் தொடங்கியபோது, மது இல்லாத சமூக மாற்றத்தை விரும்பினோம். தொடரைத் தொடங்கியதும் இதற்காகவே காத்திருந்ததுபோலக் கைகோத்து அழைத்துச் சென்றார்கள் மக்கள், சமூக சேவகர்கள், சமூக அமைப்புகள். ஒவ்வோர் அத்தியாயமும் சங்கிலித் தொடர்போல மக்களை ஒருங்கிணைத்தன. பல்வேறு பள்ளிகளில், மருத்துவமனைகளில், கோயில்களில், தேவாலயங்களில் தொடரின் அத்தியாயங்களை நல்லோர் சிலர் நகலெடுத்து விநியோகித்தார்கள். ஓர் இயக்கமாக இயங்கத் தொடங்கினார்கள் மக்கள். மதுவிலக்கு கோரிக்கைகள் வலுத்தன. அறப் போராட்டங்கள் அரங்கேறின. சிறு அமைப்புகள் முதல் கட்சிகள் வரை மதுவை ஒழிக்க நடைப் பயணங்கள் மேற்கொண்டன. தொடர் நிறைவுபெறும் இந்த நேரத்தில் முதல்முறையாக உயர் நீதிமன்றம், “மதுவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற பூரண மதுவிலக்கு பற்றி ஏன் பரிசீலிக்கக் கூடாது” என்று பொட்டில் அடித்தாற்போல் அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு தொடரால் மட்டுமே இத்தனை சமூக மாற்றங்களை மொத்தமாகக் கொண்டுவர முடியாதுதான். அதேசமயம், மதுவுக்கு எதிராகச் சமூகத்தில் கொஞ்சமேனும் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை உணர்கிறோம். ‘தெளிவோம்’என்ற நம்பிக்கையுடன் தொடரை நிறைவுசெய்கிறோம். ஆனாலும், மதுவுக்கு எதிரான ‘தி இந்து’வின் பயணம் தொடரும். 

மெல்லத் தமிழன் இனி...! 38 - யார், ஆதிகுடியைக் குடிநோயாளியாக்கியது?


ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

எது இவர்களை மதுவை நோக்கித் தள்ளியது?
பவானி சாகர் அணையிலிருந்து மூன்று மணி நேரம் அடர்ந்த வனத்துக்குள் ஜீப்பில் பயணம். இடையிடையே புரண்டோடும் காட்டாறுகள். இவற்றைக் கடந்து சென்றால் அகண்டு விரிந்து ஓடுகிறது மோயாறு. பாலம் கிடையாது. கழுத்தளவு தண்ணீரில் சாகசப் பயணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் தெங்குமரஹெடாவை அடைய முடியும். யானைகளும் புலிகளும் உலவும் வனம். வனத்தின் எல்லையில் சுமார் 130 படுகர் இனக் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் அழைத்துவரப்பட்டவர்கள்.
ஊரில் பெரிய அளவில் மனித நடமாட்டம் இருக்காது. ஆனால், அங்கும் ஒரு டாஸ்மாக் மதுக் கடை. பாதை இல்லாத ஊருக்குப் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஆற்றுக்குள் முங்கி எழுந்துவருகிறது வாகனம். ஒருவர்கூட மது அருந்தாமல் இருக்கக் கூடாது என்கிற வணிக வெறி. பல் விழுந்த பாட்டியிலிருந்து 15 வயதுச் சிறுவன் வரை மது குடிக்கிறார்கள். ஒருகாலத்தில் எப்படி வாழ்ந்தவர்கள் அந்த வனத்தின் மைந்தர்கள். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அல்லவா அது. அவர்களின் கலாச்சாரம் என்ன? பொழுதுபோக்குகள்தான் என்ன? எல்லாவற்றையும் கலைத்துப்போட்டுத் தள்ளாட்டம் ஆட வைத்திருக்கிறது மது.
வாழிடத்திலிருந்து விரட்டப்பட்ட கொடுமை
பழங்குடியினர் சமூகச் செயல்பாட்டாளரான தன்ராஜ் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. “ஆதி சமூகத்திடம் இருந்த மதுக் கலாச்சாரம் வணிகமயமானதன் விளைவே மது விஷமாக மாறக் காரணம். ஈஞ்சம் பனைக் கள்ளை யானையோடு பகிர்ந்து உண்டவர்கள் பளியர்கள். காட்டு மரப்பட்டைகளைக் காய்ச்சிக் குடித்தவர்கள் காடர்கள். அவர்களின் கலாச்சாரத்தில் மது புனித பானம். அவர் களின் கடவுளான இயற்கைக்காக இயற்கையிலிருந்து படைக்கப்பட்ட பானம்.
அவர்கள் தினசரி மது அருந்திவிட்டு மயங்கிக்கிடப் பதில்லை. விசேஷங்களுக்கு மது தயாரிப்பார்கள். பெண் எடுத்த வீடு, பங்காளி வீடுகளுக்குச் செல்லும்போது மது எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருந் தோம்பல் கலாச்சாரம். ஆனால், இன்று பழங்குடியினரின் கலாச்சாரம், இயல்பு, உடல் நலம் என அனைத்தையும் அழித்துவருகிறது வணிகமயமாக்கப்பட்ட மது.
தேனி, கடமலைக்குண்டு அருகில் இருக்கிறது கரட்டுப் பட்டி. வருஷநாடு வனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பளியர் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஊர் அது. ஆனால், அந்த மக்கள் நமது பாணி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. காட்டுக்குள் ஆங்காங்கே தனித்தனிக் குடிசைகளைக் கட்டி வசித்தவர்கள். கடுக்காய், நெல்லிக்காய் பொறுக்கியவர்கள். ஆனால், இங்கே பிழைக்க வழி தெரியாமல் குப்பை பொறுக்குகிறார்கள். காடுதான் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு, வடிகால். காட்டு விலங்கை விலங்கியல் பூங்காவில் அடைத்ததுபோலத்தான் அவர்களின் நிலையும். யோசித்துப் பாருங்கள், எவ்வளவு பெரிய சித்தரவதை இது. இந்தச் சூழலைத் தாங்க முடியாமல் அவர்கள் நாடியதுதான் டாஸ்மாக் மது. ஊரின் அனைத்து மக்களும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்கள். உண்மையில், காடுகளைக் காப்பது பழங்குடியினர் மட்டுமே. அவர்களைக் காடுகளிலிருந்து அப்புறப்படுத்தி, டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாக்கிவருகிறது அரசு” என்கிறார் தன்ராஜ்.
இயற்கையும் பழங்குடியினரும் வேறுவேறல்ல
ஓசை அமைப்பின் தலைவரான காளிதாசன், “இதுவரை இல்லாத வகையில் சமீப காலமாக பழங்குடியினர் யானையால் தாக்கப்பட்டு இறக்கிறார்கள். இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், யானையுடன் பழங் குடியின மக்கள் ஒன்றாக வசித்தவர்கள். யானையைத் தெய்வமாகக் கருதுபவர்கள். அவர்கள் யானைக்கும் சேர்த்தே பயிரிடுவார்கள். யானைக்கு மிஞ்சியதுபோகத்தான் அவர்கள் உண்பார்கள். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. மனிதர்களின் தொந்தரவுகளால் யானையின் இயல்பு மாறி விட்டது. வனத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவதால் பழங்குடியினரின் இயல்பும் மாறிவிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்கள். இதுவே பழங்குடியினரும் யானைத் தாக்குதலுக்கு ஆளாகக் காரணம்” என்கிறார்.
வீணாகப்போன போராட்டங்கள்
கோவை மாவட்டத்தில் கேரள எல்லையில் இருக்கும் அட்டப்பாடி பழங்குடியினர் கிராமத்தில் இருளர் நிலைமை கொடுமையாக இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவர்,
“1996-ம் ஆண்டு மானி என்கிற பாதிரியார் பல் வேறு போராட்டங்களை நடத்தி, இங்கிருந்த மதுக் கடைகளை அகற்ற வைத்தார். அவர் அந்தப் பகுதியை விட்டுச்சென்றதும் அங்கு சாராய வியாபாரிகள் வந்தனர். மகளிர் குழுக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி சாராயத்தையும் ஒழித்தார்கள். அதன் பின்பு அங்கு மதுவே கிடையாது. ஆனால், தமிழக எல்லையில் டாஸ்மாக் கடை வந்த பின்பு, சூழலே மாறிவிட்டது. தற்போது ஆனைக்கட்டியில் இருக்கும் மதுபானக் கடையே கதியென்று கிடக்கிறார்கள் இருளர்கள். உள்ளூரில் நடத்திய அத்தனைப் போராட்டங்களும் வீணாகப்போனது” என்கிறார். ஆதிக்குடியையும் குடிநோயாளியாக்கிவிட்டு நம் சமூகத்தில் யாரைத்தான் விட்டு வைக்கப் போகிறோம் நாம்?
எது இவர்களை மதுவை நோக்கித் தள்ளியது?
சில நாட்களுக்கு முன்பு நடந்தது இது - திருப்பூரைச் சேர்ந்த தம்பதியர் சேதுபதி - இந்திரா. பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம்செய்யும் தொழிலாளர்கள். இந்திரா திருப்பூரில் ஒரு மதுக் கடை அருகே நின்றுகொண்டு, தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்திருக்கிறார். அப்போது மயங்கிச் சரிந்திருக்கிறார் இந்திரா. கடும் போதை அவருக்கு. பதறிய பொதுமக்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு குழந்தை இறந்துபோனது தெரிந்தது. குழந்தை இறந்ததற்கான காரணம் ஆய்வுக்குரியது. அதேசமயம், கழிப்பறையைச் சுத்தம் செய்யும் ஒரு பெண்ணையும் மது அருந்தும் சூழலுக்குத் தள்ளியது எது? அதுதான் இங்கே மிகவும் கவனத்துக்குரியது; கவலைக்குரியது!
மது மொத்த மனித சமூகத்தையும் பாதிக்கிறது. அதே சமயம், தலித் சமூகத்தை, குறிப்பாக அந்த சமூகத்தில் இருக்கும் பிணவறைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழி லாளர்கள், மலம் அள்ளும் தொழிலாளர்கள், இடுகாடுகளில் இறப்புச் சடங்குகளைச் செய்யும் தொழிலாளர்கள் - இவர்களிடையே மது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிகமிக அதிகம். இதில் ஏராளமானவர்கள் முற்றிய குடி நோயாளிகள். இப்படிச் செய்யும் வேலை காரணமாக ஒரு கூட்டமே மதுவுக்கு அடிமையாவதை ‘டெவலப்மென்ட் கியூமுலேட்டிவ் ஆல்கஹாலிஸம்’(Development cumulative alcoholism) என்கிறது மது மீட்பு தொடர்பான மனநல மருத்துவம். அதாவது, சாதாரணப் பணிகளில் இருக்கும் சராசரி மனிதர்களே மது அருந்த மனரீதியான பல்வேறு காரணங்கள் சொல்லும்போது - அசாதாரணமான தொழிலில் இருப்பவர்களை மது அருந்தத் தூண்டுவது அவர்கள் தொழில், சூழல் மட்டும்தான் என்கிறது அறிவியல்.
விரும்பியா மலம் அள்ளுகிறார்கள்?
இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார் ‘எவிடென்ஸ்’அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். அவர், “தமிழகத்தில் இப்படி இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கு இன்றைக்கும் மலத் தொட்டியில் மனிதன் இறங்கிச் சுத்தம் செய்யும் அவல நிலை இருக்கிறது. நரகம் அது. மலத் தொட்டியினுள் ஒரு தொழிலாளி முங்கி எழும்போது அடையும் உடல், மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காது, மூக்கினுள் புழுக்கள் நெளியும். துர்நாற்றம் மூச்சை அடைக்கும். ஊசி, உடைந்த கண்ணாடி, பிளேடுகள் உறுப்புகளைக் கிழிக்கும். இந்தச் சூழலில் துர்நாற்றத்தை உணராமல் இருக்க, உடல், மனவேதனை உணராமல் இருக்க மது அருந்துகிறார்கள். போதைக்காக அல்ல. உண்மையில், மது அருந்தி அருந்தி அவர்களுக்கெல்லாம் போதையே ஏற்படுவதில்லை. கொஞ்ச நேரம் உடலும் மனமும் மரத்துப்போகும், அவ்வளவுதான்.
இவர்களெல்லாம் விரும்பியா மலம் அள்ளுகிறார்கள்? விரும்பியா பிணம் எரிக்கிறார்கள்? இவர்களிடம் இழிவான தொழிலைத் திணித்தது சாதியம்; மதுவைத் திணித்தது சாதியம்; கந்துவட்டிக் கொடுமையைத் திணித்தது சாதியம்; குழந்தைத் தொழிலாளர்களையும் வறுமையையும் திணித்தது சாதியம். இப்படித் தொடர் சங்கிலியாக சாதிய இழிவுகள் இந்த மக்களை வறுமையிலும் கந்துவட்டிக் கொடுமையிலும் தள்ளினாலும் அந்த இழிவுகளைத் தக்கவைத்துக்கொண்டு கொல்கிறது மது. இவ்வாறாக, ஒரு தொழிலானது ஒரு சமூகத்தையே மதுவுக்கு அடிமையாக்கியிருப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
சமீபத்தில், நாங்கள் இதுபோன்ற 303 தொழிலாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டோம். அதில் 298 பேர் மதுவுக்கு அடிமை யாகியிருந்தார்கள். மதுரை மாநகராட்சியில் இந்த சமூகத்தைச் சேர்ந்த 94 குழந்தைகளிடம் ஆய்வு செய்தோம். அதில் 96% குழந்தைகளின் தந்தையர் மதுவுக்கு அடிமையாகியிருப்பது தெரிந்தது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட 150 பேரில் 82% பேர் மதுவுக்கு அடிமையாகியிருந்தார்கள். தவிர, இவர் களின் குடும்பங்களில் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 68%, 15 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 87% என்ற அளவில் குடிநோயாளிகளாக உள்ளனர்.
‘அவன் குடிச்சே செத்தான்!’
ஒடுக்கப்பட்ட சமூகத்திலேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். எந்தக் கவனமும் பெறாதவர்கள். பொதுவாக, மது அருந்துதலை நியாயப்படுத்தும் எந்தக் காரணத்தையும் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. அதேசமயம், இவர்கள் மது அருந்தினால் மட்டுமே இந்த பணியைச் செய்ய முடியும் என்பதைப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே, பொதுச் சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு குடியின் விளைவுகளான பாதிப்புகளையும் அது பெரிய அளவில் கவனத்தில் கொள்வதில்லை. இப்படி ஒரு தொழிலாளி இறக்கும்போதுகூட ‘அவன் குடிச்சே செத்தான்’ என்பதுடன் ஒருவரின் வாழ்க்கை முற்றுப்பெறுகிறது. அங்கு அணுவளவும் அனுதாபம் தொனிப்பதில்லை. எந்த அக்கறையும் காட்டாத நிலைதான் இந்தத் தொழிலாளர்களைத் தனித் தீவாக வைத்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் இவர்களிடையே மதுப் பழக்கத்தை ஒழிப்பதும் ஒருவிதத்தில் சாதி ஒழிப்புப் பணிதான்” என்கிறார். 

Tuesday 2 December 2014

மெல்லத் தமிழன் இனி...! 37 - மது என்பது இங்கே அரசியல்!


ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

மது என்பது இங்கே அரசியல். அதன் வேர் ஆழமானது. அது சாதாரண அரசியல் அல்ல. பெரும் கூட்டத்தின் மூளையை மழுங்கச் செய்யும் அரசியல். கேள்விகளை மவுனிக்கச் செய்யும் அல்லது கேள்விகளை உற்பத்தி செய்ய விடாத அரசியல். மக்களின் உரிமைக்கான எல்லா விதமான போராட்டங் களையும் எழுச்சி பெற விடாத அரசியல். தண்ணீர் பிரச்சினை தொடங்கி ஊழல் பிரச்சினை வரைக்கும் மக்கள் சக்தியை ஒருங்கிணைக்க விடாத அரசியல். எட்டும் தூரத்தில் கொத்துக்கொத்தாக உயிர்கள் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்க்கச் செய்யும் அரசியல்.
மது மாஃபியாக்கள்!
நம்மிடையே இருக்கும் மதுவின் தீவிர நுகர்வு என்பது திணிக்கப்பட்ட கலாச்சாரம். மது அருந்துவது என்பது சமூக, பண்பாட்டுக் காரணியாக இருந்த நிலை மாறி, இப்போது அது முதலாளித்துவக் காரணியாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இது எப்போதுமே ஆள்வோருக்கு ஆதாயம். மக்களைச் சிந்திக்க வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளுக்கு, இப்போது மக்களைச் சிந்திக்க வைப்பது ஆபத்து என்று புரிந்திருக்கிறது. கல்வி நிலையங்களைவிட, மருத்துவமனைகளைவிட மதுபானக் கடைகள் அதிகம் இருப்பதன் பின்னணியில் இருக்கும் ‘மது அரசியல்’ இதுதான்.
தமிழகத்தில் மதுவுக்கு எதிராகப் பெரும்பாலான கட்சிகள் குரல்கொடுக்கின்றன. ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. ஊருக்கு ஊர் பெண்கள் கதறி அழுகிறார்கள். அப்படியிருந்தும் அரசிடமிருந்து சற்றும் சலனம் இல்லை. மணல் கொள்ளை, கனிமக் கொள்ளையைவிட ஆபத்து நிறைந்தது மது அரசியல். அதிலெல்லாம் இயற்கை வளத்தைச் சுரண்டுகிறார்கள். இதில் மனிதனின் பொருளாதாரத்தைச் சுரண்டுகிறார்கள். அதற்கும் மேலாக, மனிதனின் உயிரையே சுரண்டு கிறார்கள். மதுவை ஒழித்தால் பெரும் பகுதி ஓட்டுக்கள் கிடைக்கும் என்று ஆளும் கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், முதலாளித்துவமோ அந்த ஓட்டுக்களை வேறு வகையிலும் பெறலாம் என்று அரசுகளுக்கு ஆசை காட்டுகின்றன. ஒவ்வொரு ஆட்சியின் பிற்பகுதியிலும் இந்த சஞ்சலத்தில் தள்ளாடுகின்றன அரசுகள். இப்போதும் அப்படியே!
மணல், கனிம மாஃபியாக்களைப் போல, கல்வித் தந்தைகளைப் போல, பன்னாட்டு நிறுவனங் களைப் போல இங்கே ஆட்சியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன மது ஆலைகள். கடந்த காலங்களில் 11 மதுபான நிறுவனங்கள் இருந்தன. இப்போது 13-ஆகப் பெருகிவிட்டன. பெரும் பாலான ஆலைகளை நடத்துபவர்கள் ‘அரசியல் செல்வாக்கு’ பெற்றவர்களே.
கொள்முதல் அல்ல, கொள்ளை!
ஆக, மதுவைப் பொறுத்தவரை இங்கே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. எப்படி என்று பார்ப்போம். மதுபானங்களைக் கொள்முதல் செய்வது தொடங்கி, அதன் அனைத்து நடவடிக்கைகளையும் பற்றி முடிவெடுக்கக் குழு ஒன்று இருக்கிறது. அதன் தலைவராக உள்துறைச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களாக நிதித் துறைச் செயலாளர், டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குநர் உட்பட ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்துறைச் செயலாளரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள். அந்தப் பதவி, துறையின் அமைச்சர் வசம் சென்றுவிட்டது.

இப்போதைய நிலவரம் என்னவென்றால், எந்த ஆலையிடம் எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரத்தில் உள்ள ஒருவரும் அதிகாரத்தில் இல்லாத இருவரும்தான் தீர்மானிக்கிறார்கள் என்கிறார். விற்பனை ஆகும் மதுபானம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. டாஸ்மாக் கடைகளில் கேட்கும் சரக்கு கிடைக்காது; அவர்கள் கொடுக்கும் சரக்கைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இதற்குப் பின் புரளும் பணம் அப்படி. ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனில், அதற்குப் பின்னே எவ்வளவு பணம் புரளும்? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

Monday 1 December 2014

மெல்லத் தமிழன் இனி... 36 - நீங்கள் குடிப்பது மதுதானா?



ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

 இந்தியாவில் வேத காலத்திலேயே மது இருந்திருக்கிறது. மது உற்பத்தி, விற்பனை, விநியோகம், மது அருந்துவது குறித்தெல்லாம் ஏராளமான விதிகளை வகுத்திருக்கிறது அர்த்தசாஸ்திரம். சங்க காலத்தின் இறுதியில் தமிழர்களிடையே மதுப் பழக்கம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது. இந்தச் சூழலில்தான் திருவள்ளுவர் கள்ளுண்ணாமை குறித்து எழுதினார்.
முதன்முதலாக எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள்தான் ஒயின் தயாரித்தார்கள். இஸ்லாம் மதுவைத் தடை செய்திருந்தாலும் அதன் வேதியியல் தயாரிப்பு முறையான வடித்தெடுத்தலை வளர்த்தெடுத்தவர்கள் அரேபியர்களே. அதன் பின்பே 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் அரேபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பா வரை ஆல்கஹால் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறாக, மதுவின் வரலாறு குறித்து ஏராளமான தகவல்களைத் தனது ‘குடிக் கலாச்சாரமும் கலாச்சாரக் குடிகளும்’ என்கிற நீண்ட கட்டுரையில் மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜமாலன்.
கழிவிலிருந்து தயாராகும் மது!
எழுத்தாளர் ஜமாலன் குறிப்பிடும் நீண்ட வரலாற்றின் அனைத்துக் காலகட்டங்களிலுமே - அனைத்து விதமான மது வகைகளும் உணவுப் பொருட்களிலிருந்தே தயாரிக்கப்பட்டன. பனை மரம், தென்னை மரங்களில் கள் இறக்கினார்கள். பழங்கள், தானியங்கள், காளான், புற்கள், தேன், பூக்கள் போன்றவற்றிலிருந்து மது தயாரித்தார்கள். இன்றும் பெரும்பாலான நாடுகளில் மதுவை உணவுப் பொருட்களிலிருந்துதான் தயாரிக்கிறார்கள்.
ரஷ்யாவின் ஓட்காவை உருளைக்கிழங்கிலிருந்தும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச்சை கோதுமை, மக்காச்சோளத்திலிருந்தும், சீனாவின் மவுத்தாய் மற்றும் ஜப்பானின் சாக்கேவை அரிசியிலிருந்தும், பிரான்சின் ஷாம்பெயினை திராட்சையிலிருந்தும், கோவாவின் பென்னியை முந்திரியிலிருந்தும் தயாரிக்கிறார்கள்.
இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தென்னை, பனைப் பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மகாராஷ்டிரம், புனே, கோவா உள்ளிட்ட ஒரு சில இடங்கள் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் கரும்பு ஆலைக் கழிவான மெலாசஸிலிருந்தே மதுவைத் தயாரிக்கிறார்கள். தமிழகத்தில் நிலைமை அதைவிட மோசம்.
போட்டியில்லை; தரமும் இல்லை!
இங்கு மதுபானக் கொள்முதலை அரசே தீர்மானிக்கிறது. அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும் மதுபானங்களை மட்டுமே மக்கள் குடிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள், மது எப்படி இருந்தாலும் சரி. கொள்முதலிலும் ஆயிரம் அரசியல்.
சரி, இங்கு உற்பத்தி செய்யப்படும் மதுவும்கூட முறையாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் சந்தேகமே. தமிழகத்தின் மதுபான ஆலைகள், கரும்பு ஆலைகளில் ‘ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட்’ (Rectified spirit) வாங்குகிறார்கள். அதனைத் தங்கள் ஆலைகளில் ‘நியூட்ரல் ஸ்பிரிட்’டாக (Neutral spirit) மாற்றுகிறார்கள். அதனை மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டுகிறார்கள். இவ்வாறு மூன்று நிலைகளிலிருந்து வடிக்கப்படும் திரவத்துடன் சர்க்கரைப் பாகுவிலிருந்து தயாரிக்கப்படும் ‘கேரமில்’, மதுபான வகைக்கான எசன்ஸ், தண்ணீர் கலந்து பெரிய கொள்கலன்களில் நிரப்புகிறார்கள்.
இந்தக் கொள்கலன்களில் 72 மணி நேரம் அவற்றை இருப்பு வைக்கிறார்கள் (பிற நாடுகளில் இவை 14 நாட்கள் இருப்பு வைக்கப்படுகின்றன). அங்கு, அவை வேதியியல் மாற்றம் அடைந்து நொதிக்கின்றன. மேலே சொன்னபடி மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டப்படுவதில் முதலில் வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது உயர் ரக மதுபானம், இரண்டாவதாக வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது நடுத்தர ரகம். மூன்றாவதாக வடிக்கப்படுவதிலிருந்து தயாரிக்கப்படுவது கடைசி ரகம்.
இவற்றையெல்லாம் கண்காணிக்க ஒவ்வொரு மதுபான ஆலையிலும் ஒரு துணை கலெக்டர், நான்கு துணை தாசில்தார்கள், ஐந்தாறு தொழில்நுட்ப உதவியாளர்கள் என சுமார் 15 அரசு ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியில் இருப்பார்கள். இந்த அதிகாரிகள் முன்னிலையில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கொள்கலன் திறக்கப்பட்டு, ஒரு லிட்டர் மதுவை ஒரு குடுவையில் எடுப்பார்கள்.
இப்போது கொள்கலன், குடுவை இரண்டுக்குமே ‘சீல்’ வைக்கப்படும். அது அரசின் அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கு அந்த மது பரிசோதிக்கப்பட்டு, அதில் ஆல்கஹாலின் அளவு 41.86 - 42.86-க்குள் இருந்தால் மட்டும் அது விற்பனைக்கு அனுமதிக்கப்படும். பின்னர், மதுவை பாட்டிலில் நிரப்புவதிலும் ஏகப்பட்ட தரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதன் பின்பே அது விற்பனைக்கு வரும்.
ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறைகளெல்லாம் கண்துடைப்புதான் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள். “இங்கு அரசாங்கம் நேரடியாக மதுவை விற்பனை செய்கிறது எனில் உற்பத்தி செய்வது அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்களே. அதனால், பெரும்பாலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு ஆலையிலிருந்தும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் அந்த ஒரு லிட்டர் மதுவை மட்டுமே சரியான ஆல்கஹால் அளவு கொண்டதாகத் தயாரித்து அனுப்பி, தரச் சான்றிதழ் பெறுகிறார்கள். சில ஆலைகளில் அதுவும் கிடையாது. அப்படியே காய்ச்சி பாட்டிலில் ஊற்றுகிறார்கள். அதனால்தான் சில இடங்களில் மது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் மதுக்கின்றன. அதைத்தான் மக்கள் குடிக்கிறார்கள்” என்கிறார்கள் அந்த அதிகாரிகள்.
நொதித்த பின்பு கிடைப்பதுதான் மது. ஆனால், இங்கு குடிநோயாளிகள் குடிப்பதெல்லாம் கொதித்த பின்பு கிடைக்கும் எரிசாராயத்தைதான். குடிசார்ந்த நோய்கள் ஏன் அதிகமாகிவிட்டன என்பதும், முன்பை விட குடிநோயால் மரண விகிதம் இப்போது ஏன் அதிகரித்திருக்கிறது என்பதும் இப்போது புரிகிறதா உங்களுக்கு? 

மெல்லத் தமிழன் இனி... 35 - கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்: மது நோய்களின் உச்சம்!



ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 


 மது தொடர்பான நிறைய நோய்களைப் பார்த்தோம். அந்த நோய்களுக்கெல்லாம் உச்சம் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் (Liver cirrhosis). உயிருக்கே உலை வைக்கும் நோய். இதய மாற்று அறுவைச் சிகிச்சையெல்லாம் சாதாரணமாகிவிட்ட மருத்துவத் துறையில், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சவாலானது; மிகவும் சிக்கலானது; அதிகம் செலவு பிடிக்கக்கூடியது. சிகிச்சை வெற்றியடைய 10% மட்டுமே வாய்ப்பு கொண்டது.
ராமதாஸின் எச்சரிக்கை மணி!
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த நோய் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தமிழக அரசுக்கு மட்டுமல்ல, குடிநோயாளிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. சாதாரண எச்சரிக்கை அல்ல, உயிரைக் காக்கச் சொல்லும் அபாய எச்சரிக்கை. மருத்துவர் ராமதாஸ் அதில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் கவனத்துக்குரியவை. தமிழகத்தில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும், தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் அந்த நோயால் உயிரிழக்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலுள்ள கல்லீரல் சிகிச்சைத் துறை புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லை. இங்கு, கல்லீரல் பாதிப்புடன் ஆண்டுக்கு 3,650 பேர் வருகின்றனர். இவர்களில் சுமார் 2,200 பேர் மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள். அப்படியெனில், மதுவினால் வரும் இன்ன பிற நோய்களால் உயிரிழப்பவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள், வன்முறையில் உயிரிழப்பவர்கள் என மொத்தமாக மதுவினால் உயிரிழப்பவர்களைக் கணக்கிட்டால், ஆண்டுக்கு ஐந்து லட்சத்தையும் தாண்டிச் செல்லும் அந்த எண்ணிக்கை. நம் நாட்டின் மாபெரும் வளமே மனித சக்திதானே. அதை இழந்துவிட்டு எதை சாதிக்கப்போகிறோம் நாம்?
வெளியே தெரியாத ஆபத்து!
ஒருவர் சுமார் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மது அருந்தினால் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நிச்சயம் இந்த நோய் இருந்தே தீரும். மற்ற நோய்களைப் போல உடனே அறிகுறிகள் தெரியாது. கல்லீரல் 80% சேதமடையும்போது
தான் வெளியே தெரியும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்புகளில் தலையாயது கல்லீரல். செரிமானத்துக்குத் தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வதும் கல்லீரலே. நாம் உண்ணும் மருந்துகளை செரிமானம் செய்து, மருந்துகளின் பலனை மற்ற உறுப்புகளுக்கு அளிப்பது கல்லீரலே. காயம் பட்டு ரத்தம் வெளியேறினால் அங்கு ரத்தத்தை உறையச் செய்யும் புரோட்டீன்களை உற்பத்தி செய்வதும் கல்லீரலே. எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பெருக்கத்துக்குத் தேவையான ஆண் தன்மைக்கான ‘டெஸ்டோஸ்டிரன்’(Testosterone), பெண் தன்மைக்கான ‘ஈஸ்ட்ரோஜன்’ (Estrogen) ஹார்மோன்களை உற்பத்தி செய்வதே கல்லீரல்தான்.
சரி, மது அருந்துவதால் கல்லீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? ஒரு லார்ஜ் அளவான 60 மில்லி லிட்டர் மதுவை ஒருவர் அருந்தும்போது, அதைச் செரிமானம் செய்ய கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆனால், ஒருவர் அதிக அளவு தொடர்ந்து மது அருந்தும்போது அதன் வீரியம் கல்லீரலைக் கடுமையாகத் தாக்குகிறது. அதனால், கல்லீரல் தனது கடமைகளைச் செய்ய முடியாமல் பாதிப்படைகிறது. நோயின் முதல் கட்டமாக கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்குகிறது. இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’(Fatty liver). நோயின் அறிகுறி வெளியே கொஞ்சமும் தெரியாது.
தொடர்ந்து மது அருந்தினால் கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்கும். இது இரண்டாம் கட்டம். சுருங்கும் கல்லீரல் மீது படிப்படியாகக் கொப்புளங்கள் உருவாகும். காற்றடைத்த பலூன் போல இயல்புக்கு மாறாக வயிறு வீங்கும். ரத்தம் சுத்திகரிப்பு ஆகாததால் வயிற்றுக்குள் கெட்ட நீர் ஐந்து லிட்டர் வரை சுரக்கும். வயிற்றுக்குள் பெரிய ஊசியைச் செலுத்தி இந்த நீரை மருத்துவர்கள் அகற்றுவார்கள். தவிர கை, கால்களிலும் நீர் கோத்துக்கொண்டு, யானைக்கால் நோயாளிபோலத் தோற்றம் அளிப்பார்கள். தலை உட்பட உடலின் மொத்த முடிகளும் கொட்டிவிடும். டெஸ்டோஸ்டிரன்/ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரக்காது. ஆண்மை/பெண்மை அத்தனையும் காலி. சிறு காயம் ஏற்பட்டால் கூடப் பெரும் ஆபத்து, ரத்தம் நிற்காது.
உணவுக் குழாய் பாதிப்பது நோயின் மூன்றாம் கட்டம். உணவுக் குழாயின் உட்புறச் சுவர்களின் ரத்த நாளங்கள் சிவப்பேறி, வீங்கிப் புடைத்துக்கொண்டிருக்கும். இதன் பெயர் ‘ஈஸோஃபஜியல் வெரிசீஸ்’ (Esophageal varices). ரத்த வாந்தி எடுப்பார்கள். கண்கள், முகம், உடல், கை, கால்கள் எல்லாம் மஞ்சள் பூக்கும். மற்ற உடல் உறுப்புகள் அளவுக்கு மூளையைக் கிருமிகள் பாதிப்பதில்லை. அது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால், அங்கும் உடலில் தேங்கிய நச்சு நீர் ஊடுருவும். தலைக்குள் தாங்க இயலாத கடுமையான வலி ஏற்படும். நோயாளி வெறி பிடித்ததுபோலக் கத்திக் கதறுவார். உடனடியாகச் சிகிச்சை அளிக்கவில்லையென்றால், கோமா நிலைக்குச் சென்று இறக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

Saturday 29 November 2014

மெல்லத் தமிழன் இனி...! 34 - இப்போது நான் எங்கே இருக்கிறேன்?



ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்
நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

திரைப்படக் காட்சிகளில் அடிக்கடி இந்த வசனத்தைக் கேட்டிருக்கலாம்; ‘ஆமா, இப்ப நான் எங்கே இருக்கேன், என்ன நடந்துச்சு.
குடிநோயாளிகளுக்கு இதெல்லாம் சகஜம். முந்தைய நாள் மிதமிஞ்சி மது அருந்தியபோது என்ன நடந்தது என்றே தெரியாமல் மறுநாள் விழிப்பார்கள். முந்தைய நாள் என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம். மொத்தப் பணத்தையும் எடுத்து மதுக்கூடப் பணியாளருக்குத் தர்மம் செய்திருக்கலாம். உடன் இருந்தவருக்கு சொத்தையும் எழுதிக் கொடுத்திருக்கலாம். இல்லை, யாரையாவது கொலையே செய்திருக்கலாம். ஆனால், மூளையைத் துடைத்து விட்டதுபோல எதுவும் சுத்தமாக நினைவிருக்காது. மது மீட்பு மனநல மருத்துவம் இந்த நிலையைபிளாக் அவுட்(Blackout) என்கிறது.
அடுத்தவரையும் அழிக்கும் ஆபத்து!
இதில் இரு வகை உண்டு. கம்ப்ளீட் பிளாக் அவுட் (Complete blackout). இது முழுமையாக நினைவுகள் அழிந்து போதல். இன்னொன்று ஃபிராக்மென்ட்டரி பிளாக் அவுட் (Fragmentary blackout). நேற்று இரவு நடந்தது கொஞ்சமாக நினைவில் ஒட்டிக்கொண்டிருக்கும். யோசித்தாலும் முழுக் காட்சிகளையும் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. உடன் இருந்தவர் எடுத்துச் சொன்னால், ஓரளவு நினைவுகளை மீட்க முடியும். ஆனால், முதல் வகையானமுழுமையாக நினைவுகள் அழிந்துபோதல்என்பது அபாயகரமான நிலை. இதற்குக் காரணம், அதிக அளவு மது அருந்துவது மட்டுமல்ல, முறையற்று மது அருந்துவது.
அது என்ன முறையற்று மது அருந்தல்? சிலர் பந்தயம் வைத்து மது அருந்துவார்கள். பத்து நிமிடங்களில் நான்குபியர்அருந்துவது. அரை மணி நேரத்தில் முழு பாட்டில் மதுவைக் காலி செய்வது. விதவிதமான போட்டிகள். சிலர் சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக அவசரக் கோலத்தில் அதிக அளவு மது அருந்துவார்கள். மெதுவாக, ஆசுவாசமாக மது அருந்தும்போதுதான் அதன் போதை சீராக, படிப்படியாக ஏறும். முறையற்று, குறுகிய கால அவகாசத்தில் அதிக அளவு மது அருந்தும்போது அந்த போதையை உடனடியாக உள்வாங்க மூளை தடுமாறுகிறது. வழக்கமாகப் போதையில் ஆட்டம் போட்ட மூளை செல்கள் இப்போது மயக்கமாகிவிடுகின்றன. தற்காலிகமாக மூளையின் நினைவுகள் முழுமையாக அழிகின்றன. அந்த நிமிடத்திலிருந்து நடக்கும் எதுவுமே மூளையில் பதிவது இல்லை. மூளைக்குக் கட்டுப்படாத அந்த நபர் எதுவும் செய்வார். அவருக்கு எதுவுமே தெரியாது. இதனைடிஃபெக்டிவ் கான்ஷியஸ்னெஸ்(Defective consciousness) என்போம். நேற்றைய தினம் படித்த, அதிக மது அருந்திவிட்டுமயக்கம் அடைந்த நிலைஎன்பதைவிட இது அபாயம். ஏனெனில், அந்த நிலையில் மது அருந்தியவருக்கு மட்டுமே ஆபத்து. ஆனால், இது மற்றவர்களையும் பாதிக்கும். பெரும் பாலான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் இது போன்ற நேரத்தில் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல்ரீதியாக ஒரு விசித்திர குடிநோய் இருக் கிறது. சில குடிநோயாளிகள் எந்த நேரமும் தண்ணீர்த் தொட்டியிலோ அல்லது அண்டாவுக்குள் தண்ணீர் ஊற்றியோ உட்கார்ந்திருப்பார்கள். நாம் ஏற்கெனவே சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்த பாதங்களில் முள் போன்று குத்தும்பின்ஸ் அண்ட் நீடில்ஸ்நோயின் முற்றிய நிலை இது. முழங்கால் முதல் பாதம் வரையும், விரல் நுனி தொடங்கி மணிக்கட்டு வரையும் உண்மையிலேயே நெருப்பைப் பற்ற வைத்ததுபோல எரியும். குளிர்ந்த நீரில் இருந்தால் மட்டுமே ஓரளவு எரிச்சல் தணியும். இதன் அடுத்த கட்டமாக இந்த நோய் தசைகளுக்கும் தாவுகிறது. தசையைக் கயிற்றால் கட்டி இழுத்ததுபோலத் தாங்க முடியாத வலி ஏற்படும். உடனடியாகச் சிசிக்சை எடுத்தால் குணப்படுத்திவிடலாம்.
ஹனிமூனர்ஸ் டே பால்ஸி!’
இது மட்டுமல்ல... உலகில் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. ஆனால், மதுவினால் வரும் மன, உடல் நோய்கள் மட்டும் விசித்திரமானவை. துன்பமும் சுவாரஸ்யமும் கலந்தவை. மது மீட்பு மன நல மருத்துவத்தில் சில நோய்களுக்குச் செல்லமான பெயர்கள் நிலைபெற்றுவிட்டன. அவற்றில் குறிப்பிடத் தக்க ஒன்று, ‘சாட்டர்டே நைட் பால்ஸி(Saturday night palsy) அல்லதுஹனிமூனர்ஸ் பால்ஸி(Honeymooner’s palsy). அதிக அளவு மது அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்பவர்கள், ஆழ்ந்த மயக்கத்தில் பெரும்பாலும் வலதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுப்பார்கள். ஏன் இடதுபுறத் தோளில் தலை சாய்த்துப் படுக்க மாட்டார்களா என்று கேள்வி எழலாம். நமக்கு வலது கை பழக்கம்தான் பெரும்பான்மைப் பழக்கம் - எழுதுவது உட்பட.
சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை தினசரி அல்லது அடிக்கடி இப்படிப் படுக்கும்போது ஒரு கட்டத்தில் வலது கை திடீரென்று தனியாக உணர்ச்சியற்று தொங்கிவிடும். மரத்தில் பாதி வெட்டப்பட்ட கிளை தொங்குவதுபோல. இயக்க முடியாது. பிடிமானம் இல்லாமல் ஆடும். இதற்குக் காரணம், மணிக்கட்டை இயக்கும் ரேடியல் நரம்பு (Radial nerve) தோள்பட்டை வழியாகத்தான் செல்கிறது. அந்த நரம்பை அரை மணி நேரம் தொடர்ந்து அழுத்திப் பிடித்தாலே மணிக்கட்டில் சிறு மாற்றங்களை உணர முடியும். அப்படி இருக்கும்போது மதுவின் போதையில் பல மணி நேரங்கள், பல நாட்கள் தலையை அழுத்தித் தூங்கினால் ரேடியல் நரம்பு முற்றிலும் செயலிழந்துவிடும் என்கிறார்கள் டாக்டர்கள்.
அதெல்லாம் சரி, இதற்கு ஏன் விசித்திரமான பெயர்கள்? சனிக்கிழமை இரவுகளில் அதிக அளவு மது அருந்துவது ஒரு பெரும் கலாச்சாரமாக இருக்கிறது. அதனால்சாட்டர்டே நைட் பால்ஸி. பொதுவாக, புது மணத் தம்பதியைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்பவே அன்புடன் ஒட்டி, உரசிக்கொண்டு இருப்பார்கள். பயணத்திலும் சரி, படுக்கையிலும் சரி, பெரும்பாலும் மனைவி கணவரின் தோள்பட்டையில் தலைசாய்த்திருப்பார். அதனால் வந்தது, ‘ஹனிமூனர்ஸ் பால்ஸிஎன்கிற பெயர்.

மெல்லத் தமிழன் இனி...! 33 - மது இல்லாத தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!



ஆசிரியர் : டி.எல். சஞ்சீவிகுமார்


நன்றி : தமிழ் இந்து நாளிதழ் 

தூக்கம். பெரும் வரம். குடிநோயாளிகளுக்கோ இது பெரும் ஏக்கம். ஒருவர் தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை என்றால் அவரது உயிரியல் கடிகாரம் உருக்குலைந்துவிடும். செரிமான உறுப்புகள் செயலிழந்துவிடும். மேலும் நான்கு நாட்கள் தூங்கவில்லை எனில் பாதி மனநோயாளியாகிவிடுவார். தூக்கமின்மை தொடர்ந்தால் நிச்சயம் அவர் ஒரு மனநோயாளிதான்.
குடிநோயாளிகள் பலரும், “தூக்கம் வரலைங்க, அதான், குடிக்கிறேன்என்பார்கள். ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தினமும் மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தூங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அர்த்தம். பத்து நாட்கள் தூக்க மின்மைக்கே ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்றால் ஐந்து ஆண்டுகளாக ஒரு குடிநோயாளி தூங்கவில்லை என்றால் - நிச்சயமாக அவரும் ஒரு குடி மற்றும் மனநோயாளியே. என்ன, பலருக்கு வெளியே தெரிய வதில்லை.
உண்மையில், மது அருந்திவிட்டுப் படுக்கும்போது வருவது, தூக்கம் அல்ல; மயக்கம். மூளையைத் தவிர அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் மயங்கிக்கிடக்கும். உறக்கம் என்பது பூப்போல கண் இமைகள் அணைய வேண்டும், குழந்தையின் தூக்கத்தைப் போல. ஆனால், குடிநோயாளிகளின் மயக்கம் என்னும் தூக்கம் எருமை ஏறி மிதிப்பதற்கு ஒப்பானது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் மீது எருமை ஏறி மிதித்தால் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா? அப்படி மது அருந்திவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது உயிர் பிரியும் அபாயங்கள் நிறையவே உண்டு. சரி, டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
உறக்கத்தில் உயிர் பிரியும் அபாயம்!
சுவாசத்தின் சூட்சுமம் பின்னந்தலையில் இருக்கிறது. அந்த நரம்பு மண்டலத்துக்குப் பெயர்ரெஸ்பிரேட்டரி சென்டர்(Respiratory centre). நமது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் உயிரியல் கருவி இது. பின்னந்தலையில் பலமாக அடித்தால் மயக்கம் அடைவார்களே, அதற்குக் காரணம் இந்த கருவி சேதம் அடைவதுதான். ஒருவர் தொடர்ந்து மது அருந்தும்போது இந்த உயிரியல் கருவி கடுமையாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.30 அளவுக்கு மேல் உயர்ந்துவிட்டாலே அவரது சுவாசம் சீராக இயங்காது. திடீரென்று உச்ச நிலைக்குச் செல்லும். திடீரென்று அபாயகரமான அளவுக்கு தாழும். மூச்சுத் திணறல் இது. ஒருகட்டத்தில் முச்சு விட முடியாமல் தன்னிச்சையாகத் தூக்கத்தில் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய்த் துடித்து, அடங்கி, இறந்துபோவார். எனவே, ஒருவர் அதிக அளவு மது அருந்தி மயக்க நிலைக்குச் சென்று விட்டால் அவரை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது. அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எந்த நேரமும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
அடுத்து, ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு எழுப்ப இயலாத அளவுக்கு மயக்கத்தில் ஆழ்ந் திருக்கும்போது பெரும்பாலும் மல்லாக்கப் படுத்திருப்பார். அதிகப்படியான மது, உணவு இரைப்பையை நிறைத்திருக்கும். அதிக அளவு மது அருந்திய நிலையில் உணவு செரிக்காது. மயக்க நிலையிலேயே வாந்தி எடுப்பார்கள். மதுக்கடை வாசலில் மயக்கிக்கிடக்கும் குடிநோயாளிகள் பலரும் மயக்கத்திலேயே வாந்தி எடுக்கும் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். பக்கவாட்டில் சரிந்த நிலையில் அப்படி வாந்தி எடுத்தால் பெரியதாக அபாயம் இல்லை. மல்லாக்கப் படுத்த நிலையில் வேகமாக வாந்தி எடுக்கும்போது அது உணவுக் குழாய்க்கு மிக அருகில் இருக்கும் மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, புரையேறுவதை எடுத்துக்கொள்வோம். உண்ணும்போது லேசாக சிறு உணவுத் துகள் மூச்சுக் குழாய்க்குள் சென்றாலே தாங்க முடியாமல் இருமி, கண்ணில் நீர் வழியத் துடிக்கிறோம். தலையில் தட்டி, மெதுவாகத் தண்ணீர் குடித்த பின்பே ஆசுவாசம் அடைய முடிகிறது. அப்படி என்றால் ஏராளமான வாந்தி ஒருவரின் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, அதுவும் அப்போது அவர் மயக்கம் நிலைக்கும்போது, என்ன நடக்கும்? மரணம் நிச்சயம்.
குடிநுரையீரலையும் கெடுக்கும்!
புகைபிடிப்பதால் நுரையீரல் கெடும் என்பது தெரியும். மதுவும் நுரையீரலை பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான குடிநோயாளிகள் குறட்டை விடுவார்கள். குறட்டை என்பது ஒரு உடல் குறைபாடுதான். மது அருந்துவதால் குறட்டை நோய் அதிகரிக்கும். அதுவும் சில குடிநோயாளிகள் பயங்கரமாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாகக் குறட்டை விடுவார்கள். குறட்டை சத்தம் உச்ச நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் ஏறி, இறங்கிப் பயணிக்கும். அப்போது அவர்களின் உடல் அதிர்ந்து அடங்கும். இது நகைப்புக்குரிய விஷயம் அல்ல. அபாயகரமானது. இதுபோன்ற குறட்டையின்போது புரை ஏறி உணவுத் துகள்கள் நுரையீரலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. நுரையீரல் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே காற்றைத் தவிர எதற்கும் அனுமதி இல்லை. அங்கே உணவுத் துகள் அல்லது சிறு இறைச்சி துகள் சென்றுவிட்டால் உடனே எதுவும் தெரியாது. ஒரு வாரத்துக்குள் அது அழுகி, நோய்க் கிருமிகள் பெருகி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதன் பெயர்ஆஸ்பிரேஷன் நிமோனியா(Aspiration pneumonia). உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணமும் நேரலாம். எனவே, மதுவின் மயக்கம் என்பது மரணம் வரை அழைத்துச் செல்லும்.” என்றார்.